யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கணினி விஞ்ஞானத்துறையால் வடிவமைக்கப்பட்ட, இணையத்தை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள் ஒன்றின் பாவனைக்கான பாவனையாளர் அனுமதி ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று 18 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
விவசாய விளைபொருட்களை முகாமைத்துவம் செய்யும், விவசாயிகளுக்கும் பாவனையாளருக்குமிடையே, அதிக சேதங்களும் வீண் விரயங்களும் இன்றி இலகுவான வழியில் கொண்டு சேர்க்கும் முகமாக இணைய வழியில் செயற்படத் தக்கதாக ஒரு பிரயோக மென்பொருள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கணினி விஞ்ஞானத் துறையினரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரயோக மென்பொருளை கிளிநொச்சியைச் சேர்ந்த, தனியார் விவசாயம் சார்ந்த நிறுவனமான, வரையறுக்கப்பட்ட இந்திரா குழும (தனியார்) நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகளுக்குப் பாவிப்பதற்கான அனுமதியை வழங்கும் ஒப்பந்தம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கும் வரையறுக்கப்பட்ட இந்திரா குழும (தனியார்) நிறுவனத்துக்குமிடையே கையெழுத்தானது.
இந்த ஒப்பந்த நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சார்பில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசாவும், வரையறுக்கப்பட்ட இந்திரா குழும (தனியார்) நிறுவனத்தின் சார்பில் திரு. மகேஸ்வரன் ராஜிதனும் கையழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்திற்கான அனைத்து சட்டரீதியிலான மற்றும் வியாபார ரீதியிலான தொழில்நுட்ப உதவிகளையும் அனுசரணையையும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வியாபாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் வழங்கியிருந்தது.
இந்த நிகழ்வில், பல்கலைக்கழக பீடாதிபதிகள், விஞ்ஞான பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன், கணினி விஞ்ஞானத் துறைத் தலைவர் திரு சோமஸ்கந்தன் சுதாகர், வரையறுக்கப்பட்ட இந்திரா குழும (தனியார்) நிறுவன செயலாளர் திருமதி ராஜிதன், மற்றும் நிறுவனப் பிரதிநிதிகள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வியாபாரங்களுக்கான இணைப்பு அலுவலகப் பணிப்பாளர் பேராசிரியர் தம்பு ஈஸ்வரமோகன், முகாமையாளர் திரு சிறீபத்மநாதன் அனுராகவன், சட்டத்துறைத் தலைவர் திருமதி கோசலை மதன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வியாபாரங்களுக்கான இணைப்பு அலுவலகச் சட்ட ஆலோசகர் திருமதி துஷானி சயந்தன், பிரயோகமென்பொருள் வடிவமைப்பாளர்கள் சார்பில் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கதிரவேலு தபோதரன், கணினி விஞ்ஞானத்துறை நான்காம் வருட மாணவன் திரு. ரங்கன் ராமரூபன், மற்றும் கணினி விஞ்ஞானத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.