உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைச் சமர்ப்பித்துள்ள அரசதுறை ஊழியர்களுக்கு அவர்கள் போட்டியிடும் தொகுதியைத் தவிர அருகிலுள்ள உள்ளூராட்சித் தொகுதிகளில் பணியமர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்ற நிலையில், அரச ஊழியர்களுக்காக முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளைக் கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் அமைச்சரவைக்குக் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை உரையாற்றிய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு உரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கையளித்த ஏறக்குறைய 3,000 அரச ஊழியர்கள் தற்போது சம்பளமின்றிய விடுப்பில் உள்ளனர்.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டிருப்பதாலும், தேர்தலில் போட்டியிடும் அரசு ஊழியர்களின் ஊதியம் இல்லாத விடுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாலும், அவர்கள் நிதி நெருக்கடியில் உள்ளனர் என பல தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
T01