யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்!

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் காலம் நிறைவடைந்தது.

அந்தவகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மூவரும், கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருமாக நான்கு பேர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இருந்து, தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, மீண்டும் துணைவேந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளதுடன், உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ.கண்ணதாசன் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி ஆகியோரும், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து, விலங்கியல் துறைப் பேராசிரியர் பி.வினோபாபாவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைவாக, எதிர்வரும் ஜூலை மாத முற்பகுதியில் நடத்தப்படவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் முன்னிலையில், தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

பல்கலைக்கழகச் சட்டத்தின்படி ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை துணைவேந்தராகத் தெரிவு செய்து ஜனாதிபதி பிரகடனம் செய்வார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply