விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர், விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு (கருணா) எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
600 பொலிஸாரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கருணாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படடுள்ளது.
இது தொடர்பில், பெங்களூரை சேர்ந்த பேராசிரியரும், திருக்கோவில் முகாமில் இருந்த முன்னாள் சிறப்பு அதிரடிப்படை வீரருமான ஜனித் சமிலா, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்துள்ளதுடன், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் தீவிரமடையும் பட்சத்தில் கருணா பலரையும் கைக்காட்டிக் கொடுக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பலர் சிக்குவதோடு, அவ்வாறானவர்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் தற்போது ஜனாதிபதியாக பதவி வகித்துக்கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க, ரவி ஜெயவர்தனவின் பின்னர், படைத்துறை வன்முறை ரீதியாக இலங்கைக்கு வரும் சவால்களை சமாளிக்க கூடிய வகையில், பின் தளத்திலிருந்து வளர்க்கப்பட்டவர் என்று பிரித்தானியா வேல்ஸிலிருந்து இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜே.வி.பி காலத்தில் இடம்பெற்ற குழப்பங்களின் பின்னணியில் செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க அன்றைய காலகட்டத்தில் பெரிதாக வெளியில் தென்படைவில்லை எனவும், தற்போது அவர் வெளியில் தென்பட முக்கிய காரணமாக அமெரிக்காவின் அரசியல் நகர்வு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தென்னாபிரிக்காவை போன்று உண்மைகளை கண்டறிதலும், இன நல்லணக்கப்பாடுகளும் என்ற அமைப்பின் ஊடாக இருதரப்பும் இணங்கிப்போகும் திட்டமொன்று கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கருணா இலங்கை அரசாங்கத்தால் தேவையான நேரத்தில் பயன்படுத்தப்பட்டமையினால் தற்போது அவரை வைத்து தமிழ் மக்களின் விடயத்தில் காய் நகர்த்தும் வேலையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.