மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களமும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய பச்சிலைப்பள்ளி பிரதேச மட்ட தொழிற்சந்தை நேற்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பிரதேச செயலக மனிதவள உத்தியோகத்தர் திரு.சிவராசா தலைமையில்,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் சி.கிருஸ்னேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த தொழிற்சந்தையை ஆரம்பித்து வைத்தார்.
மேலும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக கணக்காளர் ர.சஞ்ஜீப், சமுர்த்தி வங்கி முகாமையாளர் ம.மதிவதனி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
தொழிற்சந்தையில், மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் சி.சிவசொரூபனால் தொழில் விருத்தி தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
NATIA நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட உத்தியோகத்தர் திரு.கிரிசாந்தினால் NATIA நிறுவனத்தினூடாக தொழிற்தகைமை சான்றிதழ்களை பெறும் வழிவகைகள் தொடர்பாக விளக்கமளித்ததைத் தொடர்ந்து, குறித்த தொழிற்சந்தை ஆரம்பமானது.
மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் வருடாந்த வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக, குறித்த தொழிற்சந்தையானது ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
பிரதேசத்தில் இருக்கின்ற வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் முகமாக குறித்த பிரதேச மட்ட தொழிற்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்தவகையில், மாவட்ட மட்டத்தில் உள்ள தொழில் வழங்கும் தனியார் நிறுவனங்களை அழைத்து தொழில் வாய்ப்பை ஏற்படுத்துதலே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக காணப்பட்டது.
இத்தொழிற் சந்தையில் 20 நிறுவனங்கள் கலந்துகொண்டதோடு, சேவைத்துறை, தனியார் வைத்தியசாலை, வெளிக்கள உத்தியோகத்தர் வெற்றிடங்கள், நிதிசார் நிறுவனங்களின் வெற்றிடங்கள், விவசாயத்துறை வெற்றிடங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பற்றிய ஆலோசனைகள் மற்றும் தொழில் பயிற்சி வழிகாட்டல்கள் போன்ற சேவைகள் நிறுவனங்களினூடாக வழங்கப்பட்டன.
குறித்த பிரதேச தொழிற்சந்தையில் மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர், யுவதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.