முதல்வர் ஸ்டாலின் நேரில் விவாதிக்கத் தயாரா? – அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி சவால்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் நங்கவள்ளி தெற்கு ஒன்றியத்தில், தோரமங்கலம் பகுதியில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்து உரையாற்றினார்.

அப்போது அவர், அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தின் மூலம் ஐம்பதாயிரம் ஏக்கர் பாசன வசதியைப் பெறும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், இந்தத் திட்டத்தை முடக்கி வைத்தது தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் திருமண உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற்றனர். 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகையையும் அறிவித்தோம் அவற்றையும் தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது, என்று குற்றஞ்சாட்டினார்.

தி.மு.க.வின் ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது, என்று முதலமைச்சர் கூறுகிறார். ஊழலில்தான் வளர்ச்சி அடைந்துள்ளது. முன்னாள் நிதியமைச்சர் கூறிய முப்பதாயிரம் கோடி ஊழல் குறித்துப் பேசினால் வழக்குத் தொடுப்பேன், என்கிறார் ஸ்டாலின். எந்த வழக்கு வேண்டுமானாலும் போடட்டும். அ.தி.மு.க. ஆட்சியின்போது எங்களால் வழக்குப் போட்டிருக்க முடியாதா? என இதன்போது தெரிவித்தார்.

நாங்கள் மக்களுக்கு நன்மை செய்வதற்குத்தான் வந்தோம். அதனால்தான், நான்கரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சி தந்தோம். இரண்டு ஆண்டுகளாக இந்த ஆட்சி எப்போது போகும்? என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? அவரது குடும்பம் வளர்ந்ததுதான் மிச்சம். வாய்ப்புக் கொடுத்த மக்களை ஏமாற்றக் கூடாது. அ.தி.மு.க. ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டுக் கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அது குறித்து என்னோடு நேரில் விவாதிக்கத் தயாரா?, என்றும் அவர் கேள்விகளை எழுப்பினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதான் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மடியில் கனமில்லை என்றால் வழியில் ஏன் பயம்?. தமிழகத்தில் 3,500 பார்கள் டெண்டர் விடப்படவில்லை. அதன் மூலம் கிடைக்கும் ஊழல் பணம் மேலிடத்திற்குச் செல்கிறது. ஒரு நாளைக்கு ஒரு கோடி மதுப் போத்தல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு போத்தலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டால் ஸ்டாலின் கோட்டையில் இருக்க முடியாது.

ஸ்டாலின் பேசும்போது தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று பேசுகிறார். எங்களை அடித்தால், நாங்கள் திருப்பி அடித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று பேசுகிறார். இப்படிப்பட்ட முதலமைச்சர் ஆட்சி செய்வது தமிழகத்திற்குத் தலைகுனிவு. ஸ்டாலினின் மிரட்டலுக்கு யாரும் பயப்படமாட்டார்கள். முதலமைச்சரின் பேச்சு மக்களை அச்சுறுத்தும் விதமாக இருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

83 ஆண்டுகளாக மேட்டூர் அணை தூர்வாரப்படவில்லை, எனது ஆட்சியில்தான் ஒரு ரூபாய் கூட அரசுக்குச் செலவில்லாமல் வண்டல் மண் அள்ளிக் கொள்வதற்கு அனுமதி வழங்கினேன். ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கும் விடிவு கிடைக்க வேண்டும் என்றால், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும், என்றும் எடப்பாடி பழனிசாமி தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply