அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்படவிருந்த சுமார் 1000 மில்லியன் ரூபாயை பெற வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மறுத்துவிட்டதாக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது மருமகன் முறையான ஒருவரை குறித்த நிறுவனத்தில் இணைக்காததால் அந் நிதியைப் பெற மறுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு மக்களின் பல்வேறு இன்னல்களைப் போக்க கூடிய சபையாக வடக்கு மாகாணசபை காணப்பட்ட போதிலும் அதனை சரிவர பயன்படுத்த முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது சொந்த நலன்களிற்காக மக்களின் நலன்களை புறந்தள்ளினார்கள்.மாகாண சபைக்கு அதிகாரம் போதாது எனக்கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மாகாண சபையை கைப்பற்றிய பின்னர் இருக்கின்ற அதிகாரத்தைக் கூட சரிவர பயன்படுத்த முடியாத கையாலாகாதவர்களாகக் காணப்பட்டார்கள்.வடக்கு மாகாண சபை செயற்பட ஆரம்பித்த காலத்தில் வெளிநாட்டு நிதிகள் வடக்கு மாகாணத்தை தேடி வந்தன.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்குடன் செயற்பட்ட அரசசார்பற்ற நிறுவனம் சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாயை வடக்கு மாகாண சபைக்கு வழங்க விருப்பம் தெரிவிப்பதாக அப்போதைய முதலமைச்சரிடம் விருப்பம் தெரிவித்தது.
இதற்கு அப்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறித்த சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தில் பணிபுரிந்து இடை நிறுத்தப்பட்ட தனது மருமகன் முறையான ஒருவரை மீண்டும் அதே பதவியில் அமர்த்துமாறு அந்த அமைப்பிடம் கோரிக்கை விடுத்தார்.அதற்கு சாதகமாக அந்நிறுவனம் பதிலளிக்காததால் வடக்கு மக்களுக்காக கிடைக்கவிருந்த சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாயை தனது மருமகன் நியமனத்துக்காக விக்னேஸ்வரன் தூக்கி எறிந்தார் என அவர் மேலும் தெரிவித்தார் .