இந்த வருடத்திற்கான வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தற்போது தேவை இல்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன , தற்போதுள்ள பஸ் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் தொடர முடிவு செய்துள்ளதாகவும், இந்த முடிவு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஒவ்வொரு வருடமும் ஜூன் 01 ஆம் திகதி வருடாந்த பஸ் கட்டண திருத்தம் இடம்பெறும். பணவீக்கம், ஒரு லிற்றர் டீசலின் விலை, பராமரிப்பு செலவுகள், டயர்கள் மற்றும் இதர உதிரி பாகங்களின் விலை உள்ளிட்ட பன்னிரெண்டு காரணிகளை கணக்கில் கொண்டு பேருந்து கட்டணம் தொடர்பில் கணக்கிடப்படும்.
வருடாந்திர பேருந்துக் கட்டணத்தை கணக்கிட்டு 7 சதவீத பேருந்துக் கட்டண உயர்வு இருப்பதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எங்களுக்குத் தெரிவித்தது எனவும், ஒரு சங்கமாக நாங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 7 சதவீத உயர்வை இந்த நேரத்தில் ஏற்க முடியாது எனவும் கெமுனு தெரிவித்தார்.
COVID – 19 காலத்தில் 20 சதவீத பேருந்து கட்டண உயர்வு இருந்தது. பின்னர், பேருந்து கட்டணம் 10 சதவீதத்தால் குறைக்கப்பட்டது என விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.