யாழ்ப்பாணம் செயல் திறன் அரங்க இயக்கமும் இலங்கை, இந்திய கலை இலக்கிய அமைப்பான முற்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறுவர் நாடகத் திருவிழா இன்றும் நாளையும் நல்லூரில் உள்ள அரங்கத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வு, மாலை 6.30 மணியளவில் தொடங்கும் எனவும் நிகழ்வில் நாளொன்றுக்கு இரண்டு நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளதாகவும் செயல் திறன் அரங்க இயக்க நிறுவுனர் தே.தேவானந்த் தெரிவித்தார்.
இரு நாள் நிகழ்வில் (அ)சிங்கம், முயலார் முயல்கிறார் மற்றும் கூடி விளையாடு பாப்பா ஆகிய மூன்று நாடகங்கள் மேடையேற உள்ளன.
இன்று (அ)சிங்கம் மற்றும் கூடிவிளையாடு பாப்பா ஆகிய நாடகங்கள் மேடையேறவுள்ளதோடு, மாலை 7.10 முதல் நாடகத்தின் அரங்கேற்றம் இடம்பெற்று, தொடர்ந்து 7.45 மணிக்கு இரண்டாவது நாடகம் மேடையேறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
சிறுவர்களுக்கு உள ஊக்கத்தையும், செயற்பாட்டுத் திறனையும் அதிகரிக்கக்கூடிய வகையிலான அரங்கச் செயற்பாடுகள் நாடகங்கள் தொடங்குவதற்கு முன்னரும் நாடகங்கள் முடிந்த பின்னரும் இடம்பெறும் என்பதால், பார்வையாளர்களான பிள்ளைகளை மாலை 6.30 மணிக்கே அரங்கிற்கு அழைத்து வருவது சிறந்தது என்று செயல்திறன் அரங்க இயக்க நிறுவுனர் அழைப்பு விடுத்துள்ளார்.
செயல்திறன் அரங்க இயக்கம் கடந்த 20 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் அரங்கச் செயற்பாடுகளில் தீவிரமாக இயங்கிவரும் ஓர் அமைப்பாகும்.
செயல்திறன் அரங்க இயக்கமானது, சிறுவர் அரங்கை சிறுவரின் உளவிருத்திக்காகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தனது செயற்றிட்டங்களை வடிவமைத்துச் செயற்படுத்தி வருகின்றது.
வருடாந்தம் நல்லூர் உற்சவ காலங்களில் நல்லூர் நாடகத் திருவிழா என்ற நிகழ்வைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்தி வந்தது. கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் இந்த சிறுவர் நடாகத் திருவிழாவின் ஊடாக தனது அரங்கப் பயணத்தைத் தீவிரப்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.