உலக வங்கியின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் இருந்து முதலாவதாக இலங்கைக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிதி வசதியை பெற்றுக்கொள்வது தொடர்பில், உலக வங்கி குழுவின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்துடன் உடன்படிக்கை செய்து கொள்வதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவும், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை உலக வங்கியின் பணிப்பாளர் சபை கடந்த புதன்கிழமை அங்கீகரித்துள்ளது.
இந்தத் தொகையில், 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காகவும், 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சமூகப் பாதுகாப்பிற்காகவும் ஒதுக்கப்பட்டது.