வடக்கு மாகாண சுகாதார சேவைகளுக்கு நெதர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கத் திட்டம்

வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவைகளை வழங்குவதற்காக நெதர்லாந்து அரசாங்கம் சலுகைக் கடன் முன்மொழிவுத் திட்டம் ஒன்றை வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடமாகாணத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்காக செயற்திட்டச் செலவில் 75 சதவிகிதம் அதாவது, 4.5 மில்லியன் யூரோ கடன் தொகை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு நெதர்லாந்தின் ING வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 25 சதவிகித திட்டத்திற்கு நெதர்லாந்து அரசாங்கத்தின் சர்வதேச பொது முதலீட்டுத் திட்டம் மூலம் நன்கொடையாக நிதியளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இத்திட்டத்தின் பௌதீக முன்னேற்றம் சுமார் 93 சதவிகிதம் எனவும், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு நெதர்லாந்து அரசாங்கம் கடனை 10 சதவிகிதமாகக் குறைத்து, இச்செயற்திட்டத்திற்கான நன்கொடையை 35 சதவிகிதமாக அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கான உரிய திருத்தங்களை உள்ளடக்கி, நெதர்லாந்தின்சர்வதேச பொது முதலீட்டுத் திட்டம் மற்றும் நெதர்லாந்தின் ING வங்கி உடனான உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேநேரத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை கருத்திற்கொண்டு நெதர்லாந்து அரசாங்கம் இலங்கைக்கு சாதகமான தீர்மானத்தை வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

இது தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் உதவி என்றும், இந்த தீர்மானத்தை எடுத்ததற்காக நெதர்லாந்து அரசாங்கத்திற்கு, தேசத்தின் மரியாதையை செலுத்துவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply