எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி சிறுத்தைகள் தினத்தை தேசிய சிறுத்தைகள் தினமாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓகஸ்ட் 2021 இல் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் முன்மொழியப்பட்டதன் பிரகாரம், ஒகஸ்ட் முதலாம் திகதி இலங்கை சிறுத்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டது என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் வேளையில், நாட்டில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விலங்கு இனங்களை பாதுகாக்கும் அதே வேளையில் சுற்றுச்சூழல் சுற்றுலா மூலம் அன்னியச் செலாவணியை ஈட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட நாளை தேசிய தினமாக பிரகடனப்படுத்துவதற்கு விசேட நடைமுறையொன்று உள்ளதால், இவ்விடயம் தொடர்பில் தாம் இதுகுறித்த அமைச்சருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.