முன்னாள் பொலிஸ்மா அதிபர் C. D. விக்ரமரத்னவின் சேவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்த போதிலும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னமும் விடுக்கப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அதன்படி, முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துப்பூர்வமாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மார்ச் 26 ஆம் திகதி நிறைவடைந்ததையடுத்து, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் மூன்று மாத கால நீடிப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
இதனால், விக்ரமரத்னவின் பதவிக்காலம் ஜூன் 26 ஆம் திகதி முடிவடைந்ததையடுத்து பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாக உள்ளது.
இதேவேளை, நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பான தீர்மானம் “மிக விரைவில்” அதாவது எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க, தேசபந்து தென்னகோன், பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் இதுவரை அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.