தாய் ஏர் ஏசியா பாங்கொக் கொழும்பிற்கு நேற்று முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்திற்கு நான்கு முறை புதிய சேவை இயக்கப்படும் எனத் தெரவிக்கப்படுகின்றது.
மேலும் முதல் விமானம் நேற்று இரவு 11.00 மணி அளவில், 134 பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
வருகை தந்த பயணிகள் பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சி மற்றும் இலங்கை தேயிலை வாரியத்தின் சிலோன் தேநீர் பரிசுப் பொதிகளுடன் அன்புடன் வரவேற்றனர்.
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் சுற்றுலா மட்டுமின்றி பொருளாதார, சமூக மற்றும் மத ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் தாய் ஏர் ஏசியா இரு நாடுகளுக்கும் இடையே வாரத்திற்கு நான்கு விமானங்களுடன் திட்டமிடப்பட்ட விமானச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக, இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எங்கள் நாட்டில் சுற்றுலாவிற்கு தாய்லாந்து ஒரு முக்கிய ஆதார சந்தையாகும், மேலும் இந்த உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.
2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இலங்கை 2,072 தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது. 2019 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 9,861 ஆக இருந்த நிலையில், தாய் ஏர் ஏசியா விமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம், தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை விரைவில் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் எனவும் முன்னையதை விட அதிகமாக இருக்கும் என நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தினசரி 18,000 –19,000 பயணிகள் இயக்கங்களையும், 110 –120 விமான இயக்கங்களையும் கொண்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களில், மொத்த பயணிகளின் நடமாட்டம் 20,000 ஐத் தாண்டியுள்ளது. இது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பயணிகளின் எண்ணிக்கையின் மேல்நோக்கிய போக்கைக் குறிக்கிறது என அறிக்கை மேலும் கூறியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் சர்வதேச விமான நிறுவனங்களால் திட்டமிடப்பட்ட சர்வதேச விமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதைக் கண்டு AASL மகிழ்ச்சியடைவதாக அது கூறியது.