வடதாரகையின் பயண நேரம் மாற்றப்பட்டதால் பயணிகள் பாதிப்பு

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான வடதாரகை பயணிகள் படகு நேர ஒழுங்கு இன்றைய தினம் தீடீரென மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்தனர்.

நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்ற நிலையில் கூட்டத்தில் பங்கேற்பவர்களின் வசதிக்கேற்ப வடதாரகை பொது போக்குவரத்து நேர ஒழுங்கு மாற்றப்பட்டமையால் நெடுந்தீவுக்கு செல்வதற்காக வழமையான நேரத்திற்கு குறிக்கட்டுவான் வந்த பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்தனர்.

இதன்போது நெடுந்தீவுக்கு செல்லவிருந்த மக்கள், வயோதிபர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எனப் பலரும் பாதிப்படைந்து விசனம் தெரிவித்தனர்.

குறிக்கட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி காலை 8 மணிக்கு பயணமாகும் வடதாரகை பயணிகள் படகு இன்றையதினம் நெடுந்தீவிலிருந்து குறிக்கட்டுவான் நோக்கி காலை 6.30 மணிக்கும் குறிக்கட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி காலை 7.30 மணிக்கும் சேவையில் ஈடுபட்டது.

அரச அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் என பலரும் வடதாரகை படகில் பயணத்தை மேற்கொண்ட நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்படையினரின் விசேட படகில் பயணித்தார்.

வழமையான பயண நேரமான 8 மணிக்கு வடதாரகை பயணிகள் படகில் பயணிக்க வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதன்போது அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரொருவர், பொதுமக்களை நடுத்தெருவில் அந்தரிக்க வைத்துவிட்டு யாருக்கு இவர்கள் கூட்டம் நடத்துகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

சுற்றுலா தலமான நெடுந்தீவுக்கு செல்வதற்காக வந்த நிலையில் போக்குவரத்து இல்லாமை கவலையளிப்பதாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

பொறுப்பானவர்களின் பொறுப்பற்றதனத்தால் வயோதிபர்கள், முதியவர்கள் என பலரும் ஏமாற்றத்துடன் காத்ததிருந்தனர்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply