4 ஆவது எல்.பி.எல் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆரம்ப தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச, வாக்குமூலம் பெறுவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு இன்று (02) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உமாராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவுக்கு அறிவித்திருந்தார்.
இதன்படி, அமைச்சின் விசாரணை பிரிவின் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய இவ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் உதவி செயலாளர் ஆகியோர் இவ் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இதன்போது அரசியலமைப்பு மீறப்பட்டதா? என்பது தொடர்பில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
விசாரணையின் பின்னர் அது தொடர்பான அறிக்கை அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் அதன் பின்னர் சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் நிர்வாக சபையிடமும் விசாரணை அதிகாரிகள், வாக்குமூலம் பெறவுள்ளனர்.