தென் மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை எதிர்வரும் செப்டம்பர் நான்காம் திகதிக்கு உச்ச நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல மனுக்கள் மீதான விசாரணை காரணமாக இந்த மனுவை செப்டம்பர் நான்காம் திகதிக்கு ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்தது.
நியாயமான காரணங்கள் இன்றி இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர், டிரான் அலஸ் அவர்களின் ஏற்பாட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவி உயர்வு பெறும் நோக்கில் தான் துன்புறுத்தப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி, கிழக்கு மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக தன்னை இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் உயரதிகாரியின் கடிதத்தில் உள்ள பரிந்துரை சட்டவிரோதமானது என அறிவிக்கும் உத்தரவை அவர் கோரியுள்ளார்.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி மெஹ்ரான் கரீம் உடன் ஃபைஸ் முஸ்தபா பிசி, ஷவீந்திர பெர்னாண்டோ பிசி, சிரேஷ்ட சட்டத்தரணி பைசா முஸ்தபா மார்கர் ஆகியோர் ஆஜராகினர்.