சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் உடல்நல தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகத்தை ஒவ்வொரு சிகரெட்டிலும் அச்சடிக்கும் கொள்கை ரீதியான முடிவை கடந்த ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் கனடா நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
உலக அளவில் சிகரெட் பிடிப்பதால் கோடிக்கணக்கான மக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்ற நிலையில், ஒவ்வொரு சிகரெட்டிலும் சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் உடல்நலத் தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகத்தை பதிப்பது தொடர்பாக கொள்கை ரீதியாக கனடா அரசாங்கம் கடந்த ஆண்டு தீர்மானித்தது.
நடப்பு ஆண்டின் பிற்பாதியில் இது செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகத்தை பதித்து, கனடாவில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
‘ஒவ்வொரு பஃப்பிலும் விஷம்’, ‘சிகரெட் ஆண்மைக் குறைவை ஏற்படுத்துகிறது’, ‘சிகரெட் புற்றுநோயை ஏற்படுத்தும்’, ‘சிகரெட் புகை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்’, ‘சிகரெட் உங்கள் உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுத்தும்’ போன்ற வாசகங்கள் ஒவ்வொரு சிகரெட்டிலும் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்போதைக்கு கிங் சைஸ் சிகரெட் பாக்கெட்டில் இந்த வாசகங்கள் இடம்பெற்றிருப்பதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.