வெப்பமான காலநிலை காரணமாக காய்ச்சல் பரவும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நிலவும் வெப்பமான காலநிலையுடன், சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற அறிகுறிகளை உள்ளடக்கிய காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நாட்களில் காய்ச்சல் பரவி வருவதாகவும், மக்கள் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்வதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நாட்களில் மக்கள், குறிப்பாக குழந்தைகள் நோய்வாய்ப்படுவதற்கான காரணம் வெப்பமான வானிலை மற்றும் பருவகால இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காரணமாக இருக்கலாம்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா, ஆஸ்துமா மற்றும் இருமல் உள்ள பலர் சிகிச்சைக்காக எங்களிடம் வருவதை நாங்கள் அவதானித்துள்ளோம். இது வெப்பமான காலநிலையால் தூண்டப்பட்ட நிலைமைகளின் காரணமாகவும் இருக்கலாம். எனவே, இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறோம், என்றார்.

மேலும், தற்போதைய வெப்பமான காலநிலையில் குழந்தைகள் நீரிழப்பு மற்றும் வெப்ப அலையினால் பாதிக்கப்படுவதைத் தடுக்க போதுமான கனிமங்களுடன் கூடிய திரவங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களையும் பெற்றோர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த வெப்பமான காலநிலையின் போது, குழந்தைகள் நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கவில்லை என்றால், அவர்களுக்கு வியர்வை கொப்புளங்கள் மற்றும் ஒவ்வாமை போன்ற தோல் நோய்கள் அதிகரிக்கக்கூடும் என்று பெரேரா மேலும் கூறினார்.

இதேவேளை, வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், பொதுவான நோய்களைத் தடுக்கும் வகையில், நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு, அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர்  வைத்தியர் சமில் விஜேசிங்க பரிந்துரைத்துள்ளார்.

மேலும், டெங்கு மற்றும் இன்புளுவன்சா வைரஸ் பரவி வருவதால், 48 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால், மக்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று விஜேசிங்க வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் பதுவன்துடாவ, நிலைமை கவலைக்கிடமாகத் தெரியவில்லை என்றாலும், நிலவும் வெப்பமான காலநிலை குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும், என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply