நான்கு பேர் கொண்ட குடும்பம் வாழ்வதற்கு மாதாந்தம் 76ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாக அரசாங்கப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றதுடன் அரச ஊழியர்களுக்கு மாதம் 20ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 28ஆயிரம் ரூபாவாக உள்ளது. இதன் காரணமாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை மாதாந்தம் 20ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அடுத்த வாரம் அரசாங்கத்திடம் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் செயலாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.
அடிப்படை, சம்பளம், ஆரம்ப சம்பள கொடுப்பனவுகளை சேர்த்தாலும் 30,ஆயிரம் ரூபாய் மாதாந்த சம்பளம் பெற முடியாது எனவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக 15 லட்சம் பேரில் வாழ்வதற்கு போதிய மாத சம்பளம் இல்லாமல் 13 லட்சம் பேர் அரச சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில அரச உத்தியோகத்தர்கள் உணவிற்காக காய்கறிகள் மற்றும் சோறு மாத்திரமே வேலைக்கு கொண்டு செல்வதாகவும், இது மிகவும் பரிதாபகரமான நிலை எனவும் இது தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பளம் அதிகரிக்கும் வரை உரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், 2016ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனவும் அதேவேளை 2016 ஆம் ஆண்டிலிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.