உலகம் முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று அகமதாபாதில் ஆரம்பமாகின.
முதல் ஆட்டத்தில் நடப்புச் சம்பியன் இங்கிலாந்தை நியூஸிலாந்து அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
கடந்த 2019 இல் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து முதன்முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதிகபட்சமாக அவுஸ்திரேலியா 5 முறையும், இந்தியா, மே.இந்திய தீவுகள் தலா 2 முறையும், பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் தலா ஒவ்வொரு முறையும் பட்டத்தை கைப்பற்றியுள்ளன.
ஏற்கெனவே 1987, 1996, 2011 இல் வெவ்வேறு நாடுகளுடன் இணைந்து இந்தியா உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்களை நடத்திய நிலையில், 13 ஆவது தொடரை தனியாக நடத்துகிறது.
இந்தியா, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், நெதா்லாந்து, நியூஸிலாந்து, பங்களாதேஷ், தென்னாபிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இத்தொடரில் மொத்தம் 45 லீக் ஆட்டங்கள், 3 நொக் அவுட் என மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதல் போட்டி இன்று நடைபெறும் அதே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலேயே நவம்பர் 19 இல் இறுதிப் போட்டியும் இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஜோ ரூட் 77, ஜோஸ் பட்லர் 43, ஜொனி பெயர்டோ 33 ஓட்டங்களைப் பெற்றனர்.
நியூசிலாந்தின் மற் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், மிட்ச்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.