தேசிய அடையாள அட்டைகள் தொடர்பான சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தில் பொது பாதுகாப்பு அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில், 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்கள் பதிவுச் சட்டத்தின் 52 வது பிரிவின் கீழ் செய்யப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கட்டணங்களை உயர்த்தியுள்ளார்.
இதன்மூலம், தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட நகல் வழங்குவதற்கு விதிக்கப்படும் கட்டணம் 1000 ரூபாவாக்கப்பட்டுள்ளதுடன் தேசிய அடையாள அட்டை தொடர்பான விவரங்களின் நம்பகத்தன்மையை சான்றளிப்பதற்கான கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.
அதுபோல, ஆட்கள் பதிவுத் துறையின் இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்கப்படும் ஆன்லைன் சமர்ப்பிப்புகளுக்கு ரூபா 25 வீதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆணையாளர் நாயகத்திற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய பௌதீக அல்லது இலத்திரனியல் வழிமுறைகள் மூலம் ஆவணம் சமர்ப்பிப்பதற்கான கட்டணம் ரூ. 500ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும், ஒருவரை புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 10,000 முதல் ரூ. 15,000வரை மாற்றப்பட்டுள்ளது.
பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான ஆண்டுக் கட்டணம் ரூ. 3,000 முதல் ரூ. 2,000வரை மாற்றப்பட்டுள்ளது .