அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்டை, காத்திருப்போர் பட்டியலில் உள்ள இந்தியர்கள் பெற 195 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என செனட்டர் ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு புலம்பெயரும் இந்தியர்களின் கனவுகளில் ஒன்று நிரந்தர குடியுரிமை பெறுவது. வெளிநாடுகளில் இருந்து வரும் திறமையானவர்களுக்கு அமெரிக்காவே கிரீன் கார்டு வழங்கி தங்கள் நாட்டின் குடிமக்களாக்கிவிடும். மற்றவர்கள் தங்கள் வேலையின் அடிப்படையில் கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் 2019 நிதி ஆண்டில் 9,008 இந்தியர்கள் ஈபி 1 வகை கிரீன் கார்டினையும், 2,908 பேர் ஈபி 2 வகையையும் மற்றும் 5,083 பேர் ஈபி 3 வகை கிரீன் கார்டினையும் பெற்றுள்ளனர்.
இது தவிர லட்சக்கணக்கான இந்தியர்கள் கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்துள்ளனர். இன்று காத்திருப்போர் பட்டியலில் ஒரு இந்தியர் இணைந்தால் அவருக்கு 195 ஆண்டுகளுக்கு பிறகே கிரீன் கார்டு கிடைக்கும். அவரது குழந்தை இந்த காலக்கட்டத்தில் அங்கு வளர்ந்தால் 21 வயதான பின்பு நாடு கடத்தப்படும். இந்த சிக்கல்களை போக்க, குடியேறியவர்களின் குடும்பங்களை பாதுகாக்கவும், அவர்களின் குடியேற்ற நிலையை இழக்காமல் வேலைகளை மாற்றிக்கொள்ளவும், பயணிக்கவும் கொள்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என செனட் சபையில் குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட்டர் மைக் லீ பேசியுள்ளார்.