சீனாவை துவம்சம் செய்யும் புயல் மழை

சீனாவில் பெய்து வரும் வரலாறு காணாத புயல் மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கடந்த சில நாட்களாக, புயலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இதனால் வரலாறு காணாத அளவு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது; பல்வேறு பகுதிகளில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சாலைகள், விவசாய நிலங்கள் கடும் சேதமடைந்து உள்ளன. மேலும் அங்கு கனமழைக்கான சூழல் நிலவுவதால், ஹூபே மாகாணத்தில் சியானிங் மற்றும் ஜிங்ஜோ ஆகிய நகரங்களிலும், ஜியாங்சி மாகாணத்தில் நாஞ்சாங் மற்றும் ஷாங்க்ராவ் ஆகிய நகரங்களிலும் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

‘சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 11 மில்லியன் டாலர் அளவில் பொருளாதாரச் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கால் கடும் சேதத்துக்கு உள்ளான ஆயிரக்கணக்கான கிராமப் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்’ சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘சீனா இத்தகைய கனமழையை பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வந்தாலும், 1961க்குப் பிறகு அதன் அளவு 20 சதவீதம் உயர்ந்துள்ளது. சீனா வேகமாக நகரமயமாதலை நோக்கி நகர்ந்து வருகிற நிலையில் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. குறிப்பாக, விவசாய நிலங்களை அழித்து கட்டடங்களைக் கட்டி வருவது, தொழிற்சாலைக் கழிவுகள், வாகனப் பெருக்கம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணாமாக சீனா இத்தகைய இயற்கைச் சீற்றத்துக்கு எளிய இலக்காக மாறியுள்ளது’ என, வல்லுநர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir