காஸா மீதான தொடர் தாக்குதல் காரணமாக இஸ்ரேலுடனான அரசு முறை உறவைத் துண்டித்துக்கொள்வதாக தென்னமெரிக்க நாடான பொலிவியா அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் நியாயமற்ற ராணுவ நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவை எடுப்பதாக பொலிவியா தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் மூன்று வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
ஒக்டோபர் 7ஆம் திகதி காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, போரை அறிவித்த இஸ்ரேல், இரண்டாவது கட்டமாக காஸாவுக்குள் புகுந்து தரைவழித் தாக்குதலையும் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் காஸாவில் மட்டும் 8,300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில், பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் – பெண்கள் – முதியவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை காரணமாக அந்நாட்டுடனான உறவை பொலிவியா அரசு துண்டித்துள்ளது. காஸாவின் ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் நியாயமற்ற ராணுவ நடவடிக்கைகள் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொவிலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஸா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் போர் நிறுத்தம் அறிவிக்கும்வரை இஸ்ரேலுடன் எந்த உறவும் இருக்காது, எனவும் அந்த நாடு குறிப்பிட்டுள்ளது.
காஸா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலம்பியா, சிலி ஆகிய நாடுகளும் இஸ்ரேல் நாட்டுக்கான தங்கள் தூதர்களை திரும்ப அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (04)