பேனாக்களுடன் வருமாறு தபால் மா அதிபர் வேண்டுகோள்!

தபால் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருகை தரும்போது, உரிய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்காக பேனைகளைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, பொதுமக்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் 04ஆம் திகதி உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியிலுள்ள தபால் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், அரசால் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி பொதுமக்கள் முகக் கவசங்களை அணிந்து வருகை தர வேண்டும் எனவும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோன வைரஸ் தொற்று ஏற்படும் என்பதால், எந்தவொரு தபால் அலுவலங்களினாலும் பேனை வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்டதும் பொதுமக்களுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவு, சிரேஷ்ட பிரஜைகள் கொடுப்பனவு, ஓய்வூதியக் கொடுப்பனவு ஆகிய சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னர் பொதுமக்களிடமிருந்து கையொப்பங்களைப் பெறுவதற்காக ஒரு படிவத்தை மாத்திரம் தபால் அலுவலகங்கள் பயன்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெவ்வேறு படிவங்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பொதுமக்கள் தபால் அலுவலகங்களுக்கு வருகை தரும்போது ஒரு மீற்றர் இடைவெளியைப் பேண வேண்டும் என்பதோடு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir