கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஏற்கெனவே இந்தியா மீது தான் முன்வைத்திருந்த குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய உளவு அதிகாரிகளுக்கு பங்குள்ளதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டியிருந்தார்.
இரு நாடுகளின் நட்புறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்தியாவில் இருந்த அதிகப்படியான 40 கனடா தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றது.
இந்த நிலையில், அமெரிக்க தேசியச் செயலர் அண்டனி பிளிங்கன், கனடா நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா விசாரணையை மேற்கொள்ளவும் அதற்கு இந்தியா ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்துள்ள ட்ரூடோ, கனடாவில் நிகழ்ந்த நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு பங்கிருப்பதாக நம்பத்தக்க தகவல் கிடைத்தபோதே நாங்கள் இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவ இந்தியாவைத் தொடர்பு கொண்டோம். இந்தியாவை மட்டுமல்ல அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளிடமும் இது குறித்து பேசினோம்.
ஜனநாயகத்தின் இறையாண்மையையும் சர்வதேசச் சட்டத்தையும் மீறிய இந்த விஷயத்தை நாங்கள் மிக தீவிரமாக எடுத்து கொண்டுள்ளோம். சட்ட அமலாக்கம் மற்றும் விசாரணை அமைப்புகளோடு இணைந்து இதில் தொடர்ந்து வேலை செய்யவுள்ளோம்.
சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்ட நாடு கனடா, இன்னொன்றையும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது, பெரிய நாடுகள் பின்விளைவுகளை யோசிக்காமல் சட்டத்தை மீறும்போது ஒட்டுமொத்த உலகமும் எல்லோருக்கும் ஆபத்தானதாக மாறிவிடும், எனத் தெரிவித்துள்ளார். (04)