பூஷாவில் உள்ள வெலே சுதாவின் உடல்நிலையை மதிப்பீடு செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான வெலே சுதாவின் உடல்நிலையை உடனடியாக பூஷா சிறைச்சாலைக்குச் சென்று மதிப்பீடு செய்யுமாறு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றையதினம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, பூஷா சிறைச்சாலையின் அத்தியட்சகர் கூறியது போல், பிரபல குற்றவாளி உண்மையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாரா இல்லையா என்பது குறித்த அவரது மதிப்பீட்டின் அடிப்படையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதித்துறை வைத்திய அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது.

கைதியின் உடல்நிலை காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியாது என பூஷா சிறைச்சாலை அத்தியட்சகர் தொலைநகல் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கம்பளை விதானகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.

மேலும், வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை 2024 ஜனவரி 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தெஹிவளை, இராஜகிரிய, மடிவெல, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம், வீடுகள், மற்றும் சொத்துக்களை கையகப்படுத்தி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வெலே சுதா, அவரது மனைவி மற்றும் உறவினருக்கு எதிராக 2015ஆம் ஆண்டு சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply