இலங்கையில் முழுமையாக செவித்திறன் குறைபாடுள்ள 4 இலட்சம் பேர் அடுத்த வருடம் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் கம்பஹா மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற மாற்றுத்திறனாளிகளால் விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் இது மிகவும் வெற்றிகரமான திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
செவித்திறன் குறைபாடுள்ள நபர் வாகனம் ஓட்டும் போது ஒர் ஆலோசகர் உடனிருப்பது அவசியமானது என்பதுடன், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியமைப்பு முக்கியமானது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இத்துடன் செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் ஓட்டும் வாகனங்களுக்கு அது குறித்த ஸ்டிக்கர் ஒட்டுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு வாகனம் ஓட்டும்போது சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, அந்த வழிகாட்டுதல்களின் படி வாகனம் ஓட்டுவது கட்டாயமாகும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்திருந்தார்.