இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினருக்கு பல அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்தவகையில், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க தலைவர் ரஞ்சன் ஜயலால் மற்றும் பல தொழிற்சங்கவாதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான மின்சார விநியோக நிறுவனத்தை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் சட்டமூலத்திற்கு எதிராக தொழிற்சங்க உறுப்பினர்கள் ஜனவரி 3 ஆம் திகதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக வலியுறுத்தி கொம்பன்ன வீதி பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கவனத்தில் கொண்டு குறித்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொது மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு இலங்கை மின்சார சபை தொழிற்சங்கத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.