மூன்று நாள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு சேவைகளுக்கு இடையூறு விளைவித்த இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எனவே, உரிய சட்ட விதிகளுக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், சம்பந்தப்பட்ட ஊழியர்களின் கடமைகளை இடைநிறுத்துமாறும் இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு எழுத்து மூலம் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னறிவிப்பு இன்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்று வரும் போராட்டங்களில் பங்குபற்றிய ஊழியர்கள் தொடர்பில் அமைச்சுக்கு அறிவிக்குமாறும் இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு, அமைச்சர் தனது கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
அரசுக்கு சொந்தமான மின்சார விநியோக நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கும் புதிய மின்சார சட்டமூலத்திற்கு எதிராகவும் இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் கடந்த 3ஆம் திகதிமுதல் 5ஆம் திகதிவரை மூன்று நாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு முன்னதாக, இலங்கை மின்சாரசபை நிர்வாகம், ஒரு சுற்றறிக்கை மூலம், அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் ஜனவரி 2 ஆம் திகதிமுதல் மறு அறிவித்தல் வரை ரத்து செய்தது. இருப்பினும், அவசரக் காரியம் ஏற்பட்டால், அந்தந்த பிரிவு அல்லது கிளையில் இணைக்கப்பட்ட ஒரு செயல் அதிகாரியின் ஒப்புதலுடன், ஊழியர்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் கடந்த 2023 டிசம்பர்18 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இல.2363.02 இன்படி மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய பொது சேவைகளாக பிரகடனப்படுத்தியிருந்தது.
மூன்று நாள் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது வழிகாட்டுதல்களை மீறிச் செயற்படும் ஊழியர்களை பணி இடைநிறுத்தம் செய்து உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சாரசபை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.