தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.
தாய்லாந்து உயர்மட்ட தூதுக்குழுவுடன், பிரதமர் தவிசின் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் தாய்லாந்து பிரதமர் 2024 பெப்ரவரி 3ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் தேசிய வைபவத்தில் கெளரவ விருந்தினராக பிரதமர் தவிசின் கலந்து கொள்ள உள்ளார்.
மேலும், இன்று மாலை, ஜனாதிபதியுடனான தாய்லாந்து பிரதமரின் உத்தியோகபூர்வ கலந்துரையாடலின் போது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடுவதையும் பார்வையிடவுள்ளனர்.
தாய்லாந்தின் வர்த்தக அமைச்சின் சர்வதேச வர்த்தக ஊக்குவிப்புத் திணைக்களம், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் திணைக்களம், வர்த்தகத் திணைக்களம் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை-தாய்லாந்து வர்த்தக மன்றமும் கிங்ஸ்பரி விடுதியில் நடைபெறவுள்ளது.