உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும், தமிழ் தேசிய இனத்தின் நிரந்தர அரசியல் விடியலுக்காகவும், தமிழர் தேசம் நிமிர்ந்தெழும் அபிவிருத்திக்காகவும், அன்றாட அவலங்களின் தீர்விற்காகவும் மதிநுட்ப சிந்தனை வழிநின்று மாபெரும் அர்ப்பணிப்புடன் உழைத்து வருபவர்கள் நாம்.
எமது நீதியான இரத்தம் சிந்திய உரிமைப்போராட்டத்திலும் அதன் பின்னரான அழிவு யுத்த அவலங்களின் போதும் தமிழ் தேசிய இனத்தின் சகல மக்களையும் எமது ஆழ்மன நெஞ்சங்களில் நாம் நேசித்து வந்திருந்தாலும், உழைக்கும் மக்களின் உரிமைகளும் எமது உயிர் மூச்சென்றே எமது தேசிய நீரோட்ட அரசியல் பயணத்திலும் உறுதி கொண்டு உழைத்து வருகின்றோம்.
உரிமைக்காக எமது இனம் கொடுத்த விலைகள் அதிகம். இழந்தவற்றை பெற்றிட கிடைத்த வாய்ப்புகளும் அதிகம். ஆனாலும் தமிழ் தேசிய இனத்தின் நிரந்தர விடியல் இன்னுமில்லை. உழைக்கும் மக்களின் வாழ்விலும் நிரந்தர நிம்மதியில்லை.
வரலாறெங்கும் இழப்புகளின் வலிகளும் வதைகளுமே வாழ்வாகி விட்ட எமது மக்கள், இன்று மனித குலத்தையே அச்சுறுத்தும் கொடிய தொற்று நோயின் அவலம் சூழ்ந்த வாழ்வையும் எதிர்கொண்டுள்ளனர். அது கூட எமை விட்டு அகன்று போய்விடும்.
ஆனாலும், அதன் வடுக்களும் தாக்கங்களும் எமதினத்தை தொடர்ந்து வருமோ என்ற அச்சம் ஒன்று தோன்றியுள்ளது.
பஞ்சம், பசி, பட்டினி என்பன எமது மக்களை சூழும் அவலங்களில் இருந்து நாம் மீண்டு எழவேண்டும்!
இது குறித்து தமிழ் தேசிய இனம் என்றும் உழைக்கும் மக்கள் என்றும் நீலிக்கண்ணீர் வடிப்போர் அக்கறை கொள்ளப்போவதில்லை.
உழைக்கும் மக்களினதும், தமிழ் தேசிய இனத்தினதும் உரிமைகளை வெல்லும் கனவுகள் யாவும் எம்மீதே சுமத்தப்பட்டிருக்கிறது. அதை நாம் சுமந்து நடப்போம்.
எமது விளை நிலங்களில், தரிசு நிலங்களில், வீட்டுத்தோட்டங்களில், எமது மக்களை பயிர் விளைவிக்க ஊக்குவிப்போம்.
கடல் வளங்கள் யாவற்றையும் எமது மக்களின் வாழ்வின் வளங்களாக மாற்றியப்போம். நன்நீர் வளர்ப்பு திட்டங்களால் நல்வாழ்வு கிடைத்ததென எமது மக்களை மகிழ வைப்போம்.
பனை தென்னை வளங்களை எமது வாழ்விடங்கள் தோறும் வரவழைப்போம். கிராமிய கைத்தொழில்களை, சிறு தொழில் வியாபாரிகளை ஊக்குவிப்போம்.
பெரு வியாபாரிகளின் முதலீடுகளையும் வளர்த்தெடுப்போம், உள்ளுர் உற்பத்திகளால் எமது மக்களின் தேசிய பெருளாதாரதத்தை உயர்த்திட உழைப்போம்.
உழைக்கும் மக்களின் உரிமைகள் வெல்க!
தமிழ் தேசிய இனத்தின் கனவுகள் வெல்க!!.