பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபையின் பயணிகள் பேருந்து சேவைகளுடன் 200 புனரமைக்கப்பட்ட பேருந்துகள் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தை ஒட்டிய ஜப்பான், இலங்கை நட்புறவு வீதிக்கு அருகில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த பேருந்துகள் முன்பு அப்புறப்படுத்தப்பட்டு சேவையிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்தின் கீழ் அவை முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலும் உள்ள 107 இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மற்றும் 11 பிராந்திய வேலை நிலையங்களைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் பேருந்துகளை புதுப்பித்துள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் மேலும் கூறியுள்ளது.