இலங்கை நாடாளுமன்றம், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைககைளை புறந்தள்ளி, இணையதள நடவடிக்கைகளை கண்காணிக்கும் சட்டத்தினை நிறைவேற்றியுள்ளமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமானது, இந்தாண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி தனிப்பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இணையதள பாதுகாப்புச் சட்டத்தை கவனமாக ஆராய்ந்த பின்னர், அதிலுள்ள பல பிரிவுகள் உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைவாக இல்லை எனவும் அதில் பல அம்சங்கள் விடுபட்டுள்ளன எனவும் அவதானிக்க முடிவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இருப்பினும், கடந்த மூன்று நாட்களுக்கு முன் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமையவே இந்த இணையதள பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த சட்டமூலத்திற்கு எதிராக 51 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி தீர்ப்பை அறிவித்தது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஊடக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ செயற்பாட்டுக் குழுக்கள் உட்பட பலர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வகையில், “மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரமே இந்த மசோதாவை சட்டமாக நிறைவேற்ற முடியும். அது மாத்திரமின்றி அந்த சட்டத்தில் திருத்தங்கள் தேவைப்பட்டால் அதை தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற முடியும்.” எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த மனுக்கள் மீதான விசாரணையின் போது, மசோதாவின் 56 பிரிவுகளில் 31ஆனவை திருத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் கண்டறிந்து பரிந்துரைகள் விடுத்திருந்தது. எனினும், அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என ஆணைக்குழு கூறியுள்ளது.
இதனை தொடர்ந்து, சபா நாயக்கருக்கு எழுதிய கடிதத்தில், இணையதள பாதுகாப்புச் சட்டத்திலுள்ள தொழில்நுட்ப ரீதியிலான தவறுகளை ஆணைக்குழு விபரித்து, மசோதாவில் இருந்த 30 பிரிவுகள் அரசியல் சாசனத்தின் பிரிவுக்கு 12 (1) இசைவாக இல்லை, மேலும் சில அம்சங்கள் பிரிவு 14 (1) (அ) ஆகிய பிரிவுகளுக்கு எதிராக உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், திருத்தங்கள் செய்யப்படாத நிலையில், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு ஏற்ற வகையில் அந்த சட்டம் இயற்றப்படாமை குறித்து ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது.
அதேநேரம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை இது குறித்து தெரிவிக்கையில், இலங்கையில் “கருத்துச் சுதந்திரத்தை நசுக்கவும், எதிர்ப்புக்களை ஒடுக்கவும் அரசின் ஆயுதங்களில் புதிதாக சேர்ந்துள்ள ஒரு விடயம் இது” என விமர்சித்துள்ளது.
அதேபோன்று அப்பிள், அமெசான், கூகுள் மற்றும் யாஹூ போன்ற அமைப்புக்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஆசிய இணையத்தள கூட்டமைப்பும் இந்த சட்டத்தில் பரந்துபட்ட திருத்தங்கள் தேவை எனவும், இந்த சட்டமானது நாட்டிற்கு வரக்கூடிய முதலீடுகளை பாதிக்கும் எனவும் எச்சரித்துள்ளது.
மேலும், “உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக ஏற்று அதை செயல்படுத்த தவறியமை, அந்த சட்டத்தின் தற்போதைய வடிவம் குறித்தும், நாடாளுமன்றத்தில் தேவையான அளவிற்கு வாக்குகளை பெறாமை குறித்தும் ஆழ்ந்த கவலை எழுகிறது” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனியவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.