ரணில் – ராஜபக்ஷ அரசு ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளிலேயே இறங்கியிருக்கின்றது. இதற்கு எதிராக நாங்கள் பெருந்திரளான பெண்களை அணித்திரட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றோம். நாட்டை அழிக்கின்ற இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்குப் பொதுமக்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது –
எதிர்வரும் 8 ஆம் திகதி 113 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பாகிய நாங்கள் கொண்டாடவிருக்கின்றோம். இத்தருணத்தில் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ள நாட்டு மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாது, மருத்துச் செலவைத் தாங்கிக்கொள்ள முடியாது நெருக்கடியான வாழ்க்கைக்கு முகம்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக 70 இலட்சம் பேர் அதாவது, இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் அடுத்தவேளை உணவை பெற்றுக்கொள்வதற்கு போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதற்கான பிரதான காரணம் 2022 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியாகும். இந்தப் பொருளாரதார நெருக்கடியின் காரணத்தால் கடந்த இரு வருடங்களில் 15 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வேலையில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களுக்கு தொழில்வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. இம்மக்களின் விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. நில ஆக்கிரமிப்பு தொடர்கிறது. விவசாயக் காணிகள் விடுவிக்கப்படவில்லை. அதைப்போல, இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையில் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கில் காணிப் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, கணவனை இழந்த பெண்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினை, மீனவர்களின் பிரச்சினை போன்றவற்றுக்கு இன்னமும் தீர்வு கிட்டவில்லை. இவற்றுக்கு எவ்வித பதிலையும் வழங்காது அரசு கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருக்கின்றது.
ஆனால், அரசோ கூத்துக்களைக் காண்பித்து மக்களைத் திரட்டுவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கின்றது. தற்போது 24 குடும்பங்களுக்கு அஸ்வெசும எனும் பெயரில் நிவாரணம் வழங்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. சமுர்த்தி கொடுப்பனவு பெற்ற 16 இலட்சம் குடும்பங்கள் தற்போது அஸ்வெசும திட்டத்தில் 24 இலட்சமாக அதிகரித்திருக்கின்றது. எனவே, மேலும் 8 இலட்சம் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளமை தெளிவாகின்றது.
அதுமட்டுமன்றி, தற்போதைய விலைவாசியுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்ற 1000 ரூபா சம்பளம் நாளாந்த வாழ்க்கைக்கு போதாமல் இருக்கின்றது. இந்த மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும். மலையகத்தில் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். அந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் வலியுறுத்துகிறோம்.
நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. அநீதிக்கு எதிராகப் போராடுகின்ற மக்களை இந்த அரசு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் ஒடுக்கி வருகின்றது. ரணில் – ராஜபக்ஷ அரசு ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளிலேயே இறங்கியிருக்கின்றது. இதற்கு எதிராக நாங்கள் பெருந்திரளான பெண்களை அணித்திரட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றோம். நாட்டை அழிக்கின்ற இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்குப் பொதுமக்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். என்றார்.