நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நிலவும் கடும் வரட்சியான காலநிலை அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடரும் பட்சத்தில் பகுதி அடிப்படையில் தண்ணீர் விநியோகிக்கப்பட வேண்டியிருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி விளக்கமளித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது போதுமான நீர் நிலைகள் உள்ளன என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகவும் விளக்கினார்.
இதேவேளை, இதுவரை எந்தவொரு பகுதியிலும் நீர் விநியோகத்தில் தடையோ அல்லது மட்டுப்படுத்தப்பட்டோ அமுல்படுத்தப்படவில்லை என்றும், அவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டால் 24 மணிநேர தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1919 ஐ அழைக்குமாறும் களுஆராச்சி நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளார்.