சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக மொத்தம் 1,000 பேருந்துகள் மற்றும் வேன்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், 750 வேன்களையும் மற்றும் 250 பேருந்துகளையும் இறக்குமதி செய்வதற்கான சுற்றுலா மற்றும் காணி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன்மொழிவின்படி, 6-15 இருக்கைகள் கொண்ட வேன்கள், அதே போல் 16-30 இருக்கைகள் (சிறிய) கொண்ட பேருந்துகள் மற்றும் 30-45 இருக்கைகள் (பெரிய) கொண்ட பேருந்துகள் எந்த சிறப்பு வரி விலக்குமின்றி இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறையில் ஈடுபடும் வாகனங்களை 6 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்பது சுற்றுலாத் துறையின் வழக்கமாகக் கருதப்பட்டாலும், தொழிலில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் நிலை திருப்திகரமாக இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்று அரசாங்கம் கூறுகிறது.
இதனடிப்படையில் இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிச் செயன்முறைக்குள் சுற்றுலாத்துறைக்கான பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, தொழில்துறையை மேம்படுத்துவதற்கு அத்தியாவசியமான வாகனங்களை இறக்குமதி செய்வதன் தேவை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.