முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டம் சட்டவிரோதமானது எனவும், அதற்கமைய எடுக்கப்பட்ட தீர்மானம் நீதிமன்றில் முன்வைக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் சட்ட விரோதமாக கட்சிக் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. நிமல் சிறிபால டி சில்வாவின் அழைப்பின் பேரிலேயே இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம், அரசியல் சபையை அழைப்பதற்கான முழு அதிகாரமும் கட்சியின் தலைவருக்கே உள்ளது.
மாவட்ட நீதிமன்றம் அளித்துள்ள தடை உத்தரவின்படி தற்போது கட்சியின் தலைவர் பதவியில் எவரும் இல்லை. இந்தச் சூழ்நிலையில், கட்சியின் பதில் தலைவராக எந்தவொரு நியமனமும் நீதிமன்றத் தீர்ப்பின்படியே செய்யப்படல் வேண்டும்.
நேற்றைய சட்டவிரோத அரசியல் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட அநேகமானோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல.
இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதுடன், சட்ட கட்டமைப்பிற்குள் வழங்கப்படுகின்ற நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்படும், என்று அவர் தெரிவித்துள்ளார்.