பல பாடசாலைகளில் வகுப்பறைகளுக்கும் வர்ணம் பூசுவதற்கும் ஏனைய செலவுகளுக்கும் என 2000, 2500 ரூபா பணம் அநியாயமாக அறவிடப்படுவதாக பெற்றோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சிடம் முறைப்பாடு செய்த போதிலும் கல்வி அதிகாரிகள் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அநீதி இழைக்கப்பட்ட அனைத்து பெற்றோர்களையும் கொழும்புக்கு வரவழைத்து பாரிய போராட்டமொன்றை எதிர்காலத்தில் நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “இந்த அரசாங்கம் பெற்றோரிடமிருந்து இயன்றவரைவுக்கும் பணத்தை வசூலிப்பதற்கு பாடசாலை நிர்வாகிகளுக்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது, கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வதுமில்லை, பாடசாலை பராமரிப்புக்காக பணம் வசூலிக்கப்படுகிறது. பாடசாலை அதிகாரிகள் முடிந்தவரை பல பெற்றோரை கொல்லாமல் கொன்று விடுகின்றனர். இதனால், பெற்றோர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். இது குறித்து எங்களிடம் பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.