உலகப் புகழ்பெற்ற சிகிரியாவின் நுழைவாயிலிலுள்ள சிங்கபாதத்திலிருந்து பாறையின் குன்று வரை அமையப்பெற்றுள்ள தற்போதைய பாதையை இரட்டைப் பாதையாக விஸ்தரிப்பதற்கு மத்திய கலாசார நிதியம் திட்டமிட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்ஹ தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “அதிக சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக ஏற்படுகின்ற இட நெரிசலை சீர்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு இரட்டை பாதையை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் அங்கு நெரிசல் நிலை 50% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல், சிகிரியா குன்றும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன், இப்பகுதியில் ஒரே நேரத்தில் சுமார் ஐநூறு சுற்றுலாப் பயணிகள் நடமாடுவதற்கு தேவையான இட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தென்கொரியாவின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு 2027 ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது” என்றார்.