ஜூலை மாதத்தில் 4.83 கோடிக்கும் அதிகமான இ-வே பில்கள்

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு வலுவான சாட்சியாக, ஜூலை மாதத்தில் 4.83 கோடிக்கும் அதிகமான இ-வே பில்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

தற்போது பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆக.31 வரை அமலில் உள்ள நிலையில், பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்க துவங்கியுள்ளன.

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தில் பதிவு செய்த வணிக நிறுவனங்கள், வேறு மாநிலங்களுக்கு அனுப்பும், ரூ.50 ஆயிரம் மதிப்பிற்கு மேற்பட்ட சரக்கிற்கு, ‘இ-வே பில்’ எனப்படும் மின் வழிச்சீட்டு அவசியமாகும். சரக்கு கொண்டு செல்லும் போது, வரி அதிகாரிகள் ஆய்வு செய்தால், இந்த சீட்டை காட்ட வேண்டும்.

இந்நிலையில், ஜி.எஸ்.டி நெட்வொர்க் வெளியிட்ட தகவலின்படி, ஜூலை மாதத்தில் 4.83 கோடிக்கும் அதிகமான இ-வே பில்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஜூன் மாதத்தை விட அதிகமாகியுள்ளது. ஜூனில் இ-வே பில்களின் எண்ணிக்கை 4.34 கோடியாக இருந்தது. ஆனால் கொரோனாவுக்கு முந்தைய, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பதிவாகியிருந்த 5.53 கோடி இ-வே பில்களை விட குறைவாக உள்ளது.

ஜூலை மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 லட்சம் இ-வே பில்கள் பதிவாகியுள்ளது. இது. ஜூன் மாதத்தில் பதிவாகியிருந்த சராசரியான 14 லட்சம் பில்களை விட அதிகமாகும். கொரோனா ஊரடங்கிற்கு முந்தைய காலத்தில், அதாவது ஜனவரி 25 முதல் மார்ச் 24 வரையிலான காலத்தில், நாளொன்றுக்கு சராசரியாக 18 லட்சம் இ-வே பில்கள் பதிவாகியிருந்தது. ஜி.எஸ்.டி.என் தகவலின்படி நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் மட்டும் 20.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்வழிச்சீட்டுகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir