‘மற்ற பெரிய நாடுகளை விட, கொரோனா வைரசை அமெரிக்கா தான் சிறப்பாகக் கையாள்கிறது’ என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரசால் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை அங்கு, 47.13 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,55,402 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:பல பெரிய நாடுகளைவிட நாங்கள் கொரோனா வைரசை சிறப்பாகக் கையாள்கிறோம். குறிப்பாக, இந்தியா, சீனாவைவிட கொரோனா வைரசை நாங்கள் சிறப்பாக எதிர்கொள்கிறோம். இந்தியா பெரிய பிரச்சினையில் உள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியுள்ளது. பிற நாடுகளும் கொரோனாவால் பிரச்சினைகளைச் சந்தித்துள்ளன.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அமெரிக்கா 6 கோடி பேருக்கு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துள்ளது. கொரோனா மருத்துவப் பரிசோதனைகளும் விரைவாக நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘மாகாண ஆளுநர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களின் எதிர்ப்பை மீறி, அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் ஊரடங்கைத் தளர்த்தினார். சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் முகக்கவசம் அணியாமல் மக்கள் வெளியில் நடமாடுவது அதிகரித்துள்ளது. இதுவே, கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது’ மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.