பசறை பிரதேசத்தில் வசிக்கும் தாயும் மகனும் கிராமிய வங்கி ஒன்றில் வைப்பிலிடப்பட்ட சுமார் 50 லட்சம் வரையான பணத்தை வங்கியின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் குறித்த நபர் வங்கி அதிகாரிகளிடம் புகார் அளிக்கச் சென்றபோது, வாங்கியாளர்களுடாக கேலிக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத்தொடர்ந்து ஊவா மாகாண கூட்டுறவு ஆணையாளரை சந்தித்து முறைப்பாடு செய்த போது பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அவர் கூறியுள்ளார்.
முறைப்பாட்டினை விசாரணை செய்த பதுளை பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், இந்த வங்கிக் கிளையில் பணியாற்றிய 2 பெண்களை கைது செய்துள்ளனர்.
தாயும் மகனும் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபர்கள் 50 இலட்சம் ரூபாவை மோசடியாகப் பெற்றுக் கொண்ட போலி ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்கள் போலி கையொப்பமிட்டது உறுதி செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு இருவர் மீதும் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.