கறுப்பு ஜூலை நினைவேந்தல் யாழில் இன்று மாலை அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, கறுப்பு நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் முற்றவெளி மைதானம் முன்பாக இன்று மாலை இந்த நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது நினைவேந்தல் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ஏனையவர்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இந்நிகழ்வில் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்றும், 1983 கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலையானது சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளையும் நாடு முழுவதும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களையும் நினைவு கூருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
1948 முதல் இன்றுவரை நடைபெற்ற நடைபெறுகின்ற இன அழிப்பை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.