இன்று அவசரக் கூட்டத்தைக் கூட்டிய அமைச்சரவை, பொலிஸ் மா அதிபர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தனது பதிலை அறிவிக்க முடிவு செய்துள்ளது.
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமையாற்றுவதற்கும் செயற்படுவதற்கும் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று (24) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களை தொடர்வதற்கு அனுமதி வழங்கியதை அடுத்தே உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ள இடைக்கால உத்தரவின் போது, பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்குமாறும் உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஐஜிபி தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று பிற்பகல்தான் கிடைத்துள்ளதால், அதுதொடர்பான சட்டச் சிக்கல்கள் குறித்து ஆழமாக ஆய்வு செய்ய போதிய கால அவகாசம் தேவை என்று அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அமைச்சரவையின் பதிலை இன்னும் இரண்டு நாட்களில் அறிவிப்பதே மிகவும் பொருத்தமானது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.