யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச புத்தகத் திருவிழா!

யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் ஏற்பாட்டிலும்
காலைக்கதிரின் ஊடக பங்களிப்புடனும் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் மூன்று நாட்கள் சர்வதேச புத்தக திருவிழா நடைபெறவுள்ளது.

குறித்த  புத்தக திருவிழா பற்றி நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் நேற்றைய தினம் யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் நிறைவேற்று இயக்குனர் கு. விக்னேஷ் , வர்த்தக தொழில்த்துறை மன்ற தலைவர் கலாநிதி வாசுதேவன் ராசையா மற்றும் உப தலைவர் கலாநிதி செல்லத்துரை திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில், உள்ளூர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றமானது இந்த புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த நிகழ்விற்காக இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறுபட்ட புத்தக விற்பனை நிறுவனங்கள் மற்றும் வெளியீட்டகங்களின் புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது

இதன்படி அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப  உலகில் நமது சமூகத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது.

அந்த வகையில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாசிப்பை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு தேவையான புத்தகங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு உண்டு.

உள்நாட்டிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஆர்வமும் பங்குகொள்ள விருப்பமும் உள்ள புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றிணைத்து இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இக் கண்காட்சியின் மூலம் வடமாகாணத்தை சேர்ந்த நூலகங்கள் , சனசமூக நிலையங்களுக்கும் இந்த புத்தகத் திருவிழா நல்லதொரு வாய்ப்பாக அமையும் அதேவேளை பாடசாலைகள் கூட தமது நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களை இந்த புத்தக திருவிழாவில் பெற்றுக்கொள்ள முடியும்.

புத்தக திருவிழா இடம்பெறும் தினங்களில் புத்தக வெளியீடுகள், அறிமுக நிகழ்வுகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் என்பவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இக் கண்காட்சி முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும். 40 காட்சி கூடங்கள் அமைக்கப்படும். அவற்றில் உள்ளூர் வெளியூர் எழுத்தாளர்களின் புத்தகங்களை காட்சிப்படுத்தவுள்ளோம் என ஏற்பாட்டாளர்கள் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply