சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையின் நோக்கம் தவறான விசாரணைகள் தொடர்பான உண்மைகளை ஒளித்து மறைப்பதற்காகவா என சுகாதார தொழில் நிபுணர்களின் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
சுகாதார அமைச்சின் விசாரணை பிரிவில் பணியாற்றிய முப்பது விசாரணை அதிகாரிகளில் இருபத்தி ஏழு பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது விசாரணைத் தகவல்களை மறைக்கும் நோக்கில் செய்யப்பட்டிருக்கலாம், எனவே அமைச்சு இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் மேற்படி சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சுகாதார அமைச்சின் விசாரணை பிரிவினர் செயற்பட்ட விதத்தின்படி பார்க்கையில், சுகாதார சேவையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கிடைத்த தகவல்களை வெளிப்படுத்தாமல், அவற்றை வெளிப்படுத்திய தொழிற் சங்கங்களை ஒடுக்குவதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை தற்போது இரகசியப் பொலிஸாரும் நீதிமன்றமும் உண்மைத் தகவலாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.