வாக்குச்சாவடிகளில் தொலைபேசிகளுக்கு தடை! தேர்தல்கள் ஆணையக்குழு தீர்மானம்!

சமூக ஊடகங்களில் குறிக்கப்பட்ட தபால் வாக்குச் சீட்டின் படம் வெளியானதைத் தொடர்ந்து, செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தமது கையடக்க தொலைபேசிகளை வாக்களிப்பு நிலையங்களுக்குள் எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

‘சுதந்திரமான மற்றும் நியாயமான ஜனாதிபதித் தேர்தலை உறுதி செய்வதில் ஊடகவியலாளர்களின் பங்கு’ என்ற தொனிப்பொருளில் இலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் உரையாற்றிய ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, குறித்த தபால் மூல வாக்குச் சீட்டை வெளியிட்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை,  இதுபோன்ற போக்கை தடுக்கும் வகையில், செப்டம்பர் 21-ம் திகதி வாக்குச் சாவடிகளில் கையடக்க தொலைபேசிகளை ஆணையம் தடை செய்யும் எனவும் தெரிவித்தார்.

“அஞ்சல் வாக்களிப்பின் போது குறியிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் இணையத்தில் வெளியிடப்படுவதை நாங்கள் அவதானித்துள்ளோம். அதை வாக்குப்பதிவு நாளில் தடுக்க வேண்டும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த அவர், வாக்குப்பதிவு நடத்துவதற்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டுள்ளன எனவும் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு சமமான களத்தை ஊடகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும்  அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அதனால் மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply