அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படுதல் தொடர்பான வழக்கு சமரசம் செய்யப்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கியமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று (12) தீர்க்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வழக்கின் தீர்வு தொடர்பான தீர்மானத்தை வெளியிடும் போது, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட தீர்வு நிபந்தனைகளுக்கு அமையவே செயற்பட வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமுல்படுத்தப்படுகின்ற தன்மைக்கு அமைய தேவைப்பட்டால் குறித்த தரப்பினரால் நகர்த்தல் மனு ஊடாக வழக்கை மீண்டும் அழைக்க உரிமை உண்டு எனவும், அந்த சமர்ப்பணங்களின் அடிப்படையில் வழக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் நீதிமன்றம் மேலும் அறிவித்துள்ளது.
இதன்போது இடையீட்டு மனுதாரர்கள் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி வி.கே.சோக்ஸி மற்றும் சட்டத்தரணி டி.எஸ்.ரத்நாயக்க ஆகியோர் முன்னிலையானதுடன், பிரதிவாதிகள் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆஜராகியிருந்தது.
தற்போது அரச பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்வாங்குவதற்கு ஜனாதிபதி ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தார்.
இதேவேளை பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் இதனை உறுதிப்படுத்தியதுடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவை பயிலுனர்களாக இணைத்து ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்ததாக கூறினார்.